அத்தியாயம் 10
அவர்களால் மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட அந்த மனிதனின் முகத்தில் வெளிச்சம் விழுந்தபோது தான் அவனை பார்த்தேன். அப்படியே அதிர்ச்சியில் உறைந்தேன்..
அட இது எப்படி சாத்தியம்.. ??
எனது விழிகள் வியப்பில் வெளியே வந்து விழாத குறை தான்...
அங்கே இருக்கையில் அமர்ந்து இருந்தது... நான் ...சாட்சாத் முகிலாகிய நான்..
"என்ன முகில் அதிர்ச்சியா இருக்கா ..இல்ல ஆச்சர்யமா இருக்கா... இல்ல அட்டகாசமா இருக்கா ... எப்படி இருக்கு சொல்லு... " என்றான் அவன்..
இந்த காட்சி... இதே வசனம்.. எனக்கு இதற்கு முன் பார்த்தது போல கேட்டது போல இருந்ததை நினைத்து நான் பெரிதாக அலட்டி கொள்ள வில்லை.
எத்தனையோ அதிர்ச்சியை சந்தித்து விட்டேன் அதில் இது ஒன்று...
"எல்லாமே குழப்பமா இருக்கா...?? ஹா ஹா இருக்கும் கண்டிப்பா இருக்கும் எப்படி இல்லாம இருக்கும்..? இதோ பார் " என்று சுவற்றில் ஒரு இடத்தை காட்டினான். அங்கே ரத்த சிகப்பில் திரை அணிவிக்க பட்டு ஏதோ ஒன்று ஆள் உயரத்திற்கு மறைத்து வைக்க பட்டு இருந்தது.
"இந்த திரை விலகினால் உனக்கான அனைத்து குழப்பங்களும் ஒரே வினாடியில் தீரும்.
ஆனால்...
உன் மூளையால் இதை புரிந்து கொள்ள முடியாது அதற்கு நீ வேறு காட்சிகளை காண வேண்டும் முகில்.
அந்த காட்சிகள் பார்த்து விட்டு வா.. பிறகு மீண்டும் உன்னை சந்திக்கிறேன்."
சொல்லி விட்டு அந்த இன்னோரு முகில் தனது விசேஷ கைஉறையில் ஏதோ சைகை செய்தான். அவன் அணிந்து இருந்த கைஉறை மிக விசித்திரமாக இருந்தது. அவன் அதை செய்ததுமே..
என்னையும் மொட்டைகளையும் தவிர அந்த ஹால் மொத்தமாக அப்படியே சூறாவளி போல் சுற்றியது கண்டு ஒரு கணம் திகைத்து போனேன். அறையின் சுவர்கள் படு வேகத்தில் சுழன்றது ..சுவர் மட்டும் அல்ல மேல் கூரை.. கீழ் தரை...
மொத்தத்தில் பிரமாண்ட மிக்சிக்கு உள்ளே அசையாமல் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது போல ஒரு உணர்வு....
திடீரென....
மொத்தமாக இருட்டாக ஆகியது.. எங்கோ பிரபஞ்சத்தில் ஒரு இருட்டில் தொலைந்தவன் போல ஆனேன்.
பிளாக் ஹோலில் வீச பட்டவன் போல் உணர்ந்தேன்.
✳ ✳ ✳ ✳ ✳
நகரும் படிக்கட்டில் நகர்ந்து.....
அந்த இடத்திற்கு பொருத்தம் இல்லாத மிக பெரிய அரண்மனை கதவுகள் திறந்து .....
அந்த ஹாலில் நாங்கள் நீண்ட தூரம் நடந்து...
அவனை நெருங்கி...
அவர்கள் கிட்டே நெருங்க நெருங்க..
"மாஸ்டர் நாங்கள் அவனை கூட்டி வந்து விட்டோம் " என்றார்கள்.
எனக்கு மண்டை ஆன்டி கிலாக் வைசில் சுற்ற தொடங்கியது. இதே காட்சி... இதே காட்சி ...இப்போ தானே 5 நிமிடம் முன்னாடி நடந்தது. அதில் மிக மிக மிக குழப்பான நிச்சயம் கவனிக்க வேண்டிய விஷயம்... அந்த 5 நிமிடம் முன் நடந்த இதே நிகழ்ச்சியின் போதும் எனக்கு இதே நிகழ்ச்சி முன்பே நடந்தது போல் தோன்றியது தான். இப்போது அது மிக பெரிய விஷயமாக தோன்றியது...its like a infinity loop..கடவுளே என்னை சுற்றி என்ன தான் நடக்கிறது தயவு செய்து சொல்.
அப்போது தான் மிக மிக மெல்லிய ஒரு உணர்வை அடைந்தேன். அங்கே இருப்பது நான் அல்ல..நான் இங்கே இருக்கிறேன்..இருட்டுக்குள்.. சுழலும் அறைகுள்.. பிளாக் ஹோலுக்குள்.. மிக்சிக்குள்.. ஏதோ ஒன்றுக்குள் ஆனால் அங்க நான் இல்லை. அங்கே நடப்பது நான் காணும் காட்சி மட்டுமே..அந்த இன்னோரு முகில் சொன்ன காட்சி. எனவே எனது எண்ணத்தை காட்சிக்கு தடையாக்காமல் கவனிக்க தொடங்கினேன்.
🕸 இவர்களால் மாஸ்டர் என்று அழைக்கப்பட்டவன் எந்த சலனமும் இன்றி எங்களைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்...மன்னிக்கவும்.. மன்னிக்கவும்..எங்களை அல்ல அவர்களை பார்த்து கொண்டு இருந்தான் .
கிட்டே நெருங்கியதும்..
"வா முகில் உனக்காக தான் காத்து இருக்கேன் ஹா ஹா "
என்றான் அந்த மாஸ்டர்.
கிட்டே நெருங்கியதும் அவன் முகத்தில் வெளிச்சம் விழுந்தது. அவன் முகம் காண கிடைத்தது..
அவன்....
என்னை இந்த கதையின் தொடக்கத்தில் ரயில் ஏற்றி விட்ட எனது நண்பன் டேனியல்.
"டேனியல் " என்றான் ஆச்சர்யமாக முகில்.
'எனக்கு தெரியும் இவனை கேட்டால் நான் டேனியல் அல்ல என்பான்.. தங்கை நீலா கதை தான் இங்கேயும் நடக்கும்.. 'என்று நினைத்தான் அந்த முகில்.
ஆனால்.....
"ஆம் உனது நண்பன் டேனியல்... உன்னை ரயில் ஏற்றி விட்ட உனது நண்பன் டேனியல் " என்றான் ஆச்சர்யமாக .தன் மனதை படிக்கிறான் என்று உணர்ந்தான் அந்த முகில்.
"Come my dear rat " என்றான்..
அவன் ஏன் அப்படி அழைத்தான் என்று சத்தியமாக முகிலுக்கு தெரியாது.
"என்ன முகில் எல்லாமே குழப்பமா இருக்கா.. " என்றான் பிறகு ஹா ஹா என்று அட்டகாசமாக சிரித்தான் ஓநாய் சிரிப்பது போலிருந்தது அது.
"இருக்கும் ...கண்டிப்பா இருக்கும் .. குழப்பம் கண்டிப்பா இருக்கும் இல்லாம எப்படி இருக்கும்? என்னுடைய call-con டிசைன் அப்படி..." என்றான்.. பரபரப்பாக வேகமாக பேசினான் டேனியல் . அவன் இயல்பு அது .
"நீ இது வரை குழம்பியது போதும் முகில்.. உனக்கு சொல்றேன்.. எல்லாம் சொல்றேன்.. விளக்கமா சொல்றேன்..கிட்ட வா.." குழந்தை போல வாஞ்சையோடு கூப்பிட்டான்.
முகில் அந்த இடத்தை கண்ணால் ஆராய்ந்தான் கூரை முதல் மேஜை வரை தரை முதல் தம்ளர் வரை எங்கும் சிகப்பு எல்லாமே சிகப்பு நிறம்..
"என்ன முகில் அப்படி பாக்கர .. இந்த கலர் பிடிகளையா ? சொல்லு மாத்திடறேன் " என்றான்.. கைகளால் ஏதோ சைகை போல செய்தான்.
அவன் கைகளை அப்போதுதான் கவனித்தான் முகில் மிக விசித்திரமான ஒரு கையுறையை அவன் அணிந்திருந்தான் வலது கையில் மட்டும் அதை அணிந்து இருந்தான். இடது கையில் காபி கோப்பை வைத்து இருந்தான் அதில் இரண்டு டிராகன்கள் மோதுவது போல டிசைன் இருந்ததை பார்த்தான் முகில். வலது கையில் அந்த கை உறை ஆங்காங்கே சின்ன லைட் மினுக்கிக் கொண்டு.. ஒரு எலக்ட்ரானிக் டிவைஸ் போல இருந்தது.. அதில் ஏதோ விரல் அசைவு செய்ய அது மீண்டும் லைட்டை மினுக்கியது...
உடனே மந்திரம் போட்ட மாதிரி அந்த அறையின் காட்சி மாறியது.. முழுக்க முழுக்க அனைத்தும் வெளியே ஸ்டேஷனில் பார்த்தது போல வெள்ளை நிறத்திற்கு மாறி விட்டது..
இன்னும் கொஞ்சம் லைட் போடட்டுமா என்றான்.. அறை இப்போது பிரகாசமான ஒளியில் மூழ்கியது..
"இந்த கால் கன் உலகில் என்னால் பிக்ஸ் பண்ண முடியாதது ஒண்ணே ஒன்னு தான் .. கடிகாரங்கள் இங்கே ஓடாது."
டேனியல் அணிந்து இருந்த வெள்ளை கோட் வெள்ளை பேண்ட் பளபளப்பாக காட்சி அளித்தது..
"என்ன முகில் அசத்தலா இருக்கா .. இல்ல ஆச்சர்யமா இருக்கா ..இல்ல... அட்டகாசமா இருக்கா ? எப்படி இருக்கு சொல்லு...திஸ் இஸ் கால்ட்.. 'கால்-கன் ' வெல்கம் டூ மை வர்ல்ட் டியர்.. இங்க நான் தான் கடவுள்..
actually நீ ஆரம்பத்துல இருந்தே கால் கன் ல தான் இருக்க நான் எங்க இருக்கேன் என்ற கேள்வியை பயணம் ஆரம்பிக்கும் போதே கேட்டு இருந்தா அப்போவே சொல்லி இருப்போம் இதை."
முகில் அசந்து நிற்பதை கொஞ்சம் ரசித்துவிட்டு டேனியல் தொடர்ந்தான்.
" இந்த டேனியல் என்கிற நண்பனை உனக்கு வெறும் சாதாரண கேம் டெவலப்பராக தான் தெரியும் ஆனால் நான் அதற்கெல்லாம் மேல ...ரொம்ப மேல.. நீ கற்பனை பண்ண முடியாத அளவு கண்டுபிடிப்பாளன்.
இந்த ...கண்ணுல virtual reality டிவைஸ் மாட்டி கிட்டு 3D effect ல game விளையாடுவது பார்த்து இருப்ப ஆனா நான் கண்டு பிடித்த இந்த game tech ..அதை விட 100 மடங்கு அற்புதமான சரக்கு. இதில் ஒரு தனி உலகத்தையே உருவாக்கி அதில் உன்னை போல நிஜ கேரக்டரையும்.. இவர்களை மாதிரி (அந்த மொட்டைகளை காட்டி ) உருவாக்க பட்ட கதாபாத்திரங்களையும் ஒன்றாக ரத்தமும் சதையுமாக உலவ விட முடியும். முகில் நீ பார்த்த ரயில் காடு மலை அருவி.. எல்லாமே வெறும் ஒரு பூட்டின ரூமில் நீ கண்ணை மூடி கொண்டே பார்த்தது னு சொன்னா நம்புவியா... "
முகில் அவனை திகைத்து போய் பார்த்து கொண்டு இருந்தான். உண்மையில் அவன் சொல்வது ஒண்ணுமே முகிலுக்கு புரியவில்லை...
"நீ ..நீ.. ஏதோ குழப்பம் பண்ற... நான் ..நான்.. லக்னோ போற ஒரு பயணி.. ரயில்ல நான் தூங்கின பின்..நீ கடத்தி வந்து என்ன எதோ பண்ற....." என்றான் முகில் தட்டு தடுமாறி...
"ஹா ஹா...ஹா ஹா... " அந்த அரங்கம் அதிர சிரித்தான் டேனியல்...
"நான் குழப்பம் பண்ணல டியர் குழப்பம் தெளிவிக்கிறேன் "
"முகில்.... முகில்.... மை டியர் நண்பா.. நீ போறனு சொல்ற அந்த லக்னோ.. நான் உனக்கு பண்ண brain game ப்ரோக்ராம் நண்பா. என்ன நம்பிக்கை இல்லையா..?. சரி அப்போ நான் கேக்கிற ஒரு எளிமையான 2 மார்க் கொஸ்டின் க்கு ஆன்ஸ்வர் பண்னு பார்க்கலாம்... மூச்சுக்கு முன்னூறு தடவை நான் லக்னோ போறேன் லக்னோ போறனு சொல்றீயே.. நீ லக்னோ ஏன் போயிட்டு இருக்க னு சொல்லு பாக்கலாம்.... "
"நான் லக்னோ எதற்காக போகிறேன் என்றால்.... எதற்காக போகிறேன் என்றால்...." நான் பரீட்சையில் படிக்காமல் வந்தவன் போல விழித்தேன் . .சாரி சாரி முகில் விழித்தான். ஆம் நிஜமாக அதற்கு முகிலுக்கு விடை தெரிய வில்லை என்பதை உணர்ந்தான்.
"மை டியர் பிரன்ட்.. இந்த கொஸ்டினை நீ சாய்ஸ் ல தான் விட்டு ஆகணும் இன்னும் 10 மணி நேரம் யோசித்தாலும் விடை சொல்ல முடியாது காரணம் உனக்கு நான் அதை இன்னும் ப்ரோக்ராம் பண்ணவே இல்லை .
நீ உண்மையில் இப்போ ரயிலிலும் இல்லை ஸ்டேஷனிலும் இல்லை.. நீ இப்போ எங்க இருக்க தெரியுமா.... ஒரு வானந்திர பிரதேசத்துல எனது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கைவிட பட்ட பில்டிங் ல என்னோடைய ஒரு பர்சனல் டெம்பரவரி லேப் ல சோதனை அறை ல கான்ஷியஸ் இல்லாம படுத்து இருக்க.
இப்ப நான் பேசிட்டு இருப்பது உன் மூளைக்குள் ஊடுருவி... என்ன நம்பிக்கை இல்லையா ?"
முகில் பேச ஏதும் இன்றி நின்று இருக்க டேனியல் தொடர்ந்தான்...
"உன்னையே நீ பாக்க விரும்பரியா ? like a out of body experience. அந்த காலத்தில் சித்தர்கள் சாதித்தது மாதிரி.. வா.. இங்க உட்கார் "
அவன் சொன்ன இருக்கையில் மந்திரித்து விட்டவன் போல அமர்ந்தான் முகில். அவன் கைகளில் அணிந்து இருந்த கையுரையில் மீண்டும் ஏதோ செய்தான். ஹாலின் மையத்தை நோக்கி கையை காட்டினான்.
இப்போது மேலே கூரையில் இருந்த
சின்ன ப்ரொஜெக்டர் மாதிரி கருவி ஒளியை அறையில் பாய்ச்சியது அது ஒரு ஹைடெக் 3d ஒளி பரப்பு கருவி..
அந்த ஹாலில் மையத்தில் ஹாலோ கிராபிக் இல் தத்ரூபமாக காட்சியை ஒளி பரப்பியது..
அதில் மிஷின்கள் ..மின்னணு கருவிகள் கணினிகள் ..மானிடர்கள்.. நிறைந்த ஒரு அறையில் நடுவே ஸ்ட்ரெக்ச்சர் மாதிரி அமைப்பில் ஒருவன் படுத்து இருந்தான்.. அவன் வேறு யாரும் இல்லை முகில் தான்.
அதாவது......
சுழலும் அறையில் இருந்து இதை பார்ப்பவன் முகில் இதை பார்க்க வைத்தவன் முகில் அங்கே காட்சியில் நின்று கொண்டு இருப்பவன் முகில் . அவன் காணும் காட்சியில் அங்கே படுத்து இருப்பவனும் முகில்.
அந்த படுத்திருந்த முகில் தலையில் ஹெல்மட் மாதிரி அமைப்பு மாட்ட பட்டு இருக்க அதில் L.E.D கள் ஒளிர்ந்து கொண்டு இருந்தது.. அவன் அருகே அங்கு ஒரு டேனியல் கண் மூடி அமர்ந்து இருந்தான் அவன் தலையில் இருந்து ஒரு சின்ன கருவியில் இருந்து wire அந்த முகில் ஹெல்மெட் இல் இணைந்து இருந்தது. பக்கத்தில் சுவரில் ஒரு பெரிய மானிடர் இருந்தது அதில் இதோ என் கண் முன்னால் இருக்கும் இந்த முகிலும் இந்த டேனியலும் இந்த ஹாலில் இப்போது பேசி கொண்டு இருக்கும் இந்த காட்சி லைவ் ஆக ஒளி பரப்ப பட்டு கொண்டு இருந்தது.
"இதான் உன் ரியாலிட்டி... நிஜ உலகம். இப்ப நீ பேசிட்டு இருப்பது உனது மூளைக்குள் ஊடுருவி இருக்கும் என்னிடம். அதாவது நான் கட்டமைத்த உலகில். உன் நிஜத்தை லைவ் வீடியோ பண்ணி அதை இதோ இந்த ஹெல்மட் வழியே உனது மூளைக்குள் அனுப்பி மீண்டும் காட்சிப்படுத்தி தான் உன்னை நீயே பார்க்க முடிகிறது.. உன் மூளையில் நீ 'பார்க்கும் ' விஷயங்கள் அனைத்தும் நிஜ உலகில் உன் அருகில் அதோ அந்த ஸ்க்ரீனில் ஒளிபரப்பாகும். Reality to virtual... Virtual to reality... This is my new level 'virtual reality..'.
the great invention of the great Daniel. "callosum controller" சுருக்கமா ."CALL-CON "
உனக்கு Callosum தெரியும் இல்ல.. "corpus callosum " அதாவது வலது cerebrum மற்றும் இடது cerebrum ஐ இணைக்கும்.. ஒரு...ஒரு... fiber bundle னு வச்சிகளாம்.. its like a communication bridge. பள்ளி பாடங்களில் மூளையின் படம் வரைந்து பாகம் குறிக்கும் போது இதை படித்து இருப்போமே.
உனது வலது இடது மூளைகள் தங்களுக்குள் தகவல் பரிமாறி கொள்வது இதன் வாயிலாக தான். உடலின் இடது பாகத்தை வலது மூளையும் வலது பாகத்தை இடது மூளையும் கட்டுப்படுத்தும் னு ஸ்கூல் ல படிச்சி இருப்ப இல்ல. உன்னோடைய க்ரியேட்டிவிட்டி பகுதி இதுல எங்க இருக்கு சொல்லு.... ? உனது வலது மூளையில்.
இங்கே தான் எனது call con புகுந்து நான் சொல்லும் சிக்னல் ஐ கொடுக்கும். ஒரு மனிதன் வலியை உணர சம்பந்த பட்ட உறுப்பு தேவை இல்லை தெரியுமா ? உனது இடது காலை துண்டாக்கி தனியாக எடுத்து விட்ட பின்பும் கூட உனது காலின் கட்டை விரலில் வலியை உண்டாக்க முடியும். இரண்டாம் உலக போரில் காலே இல்லாத சோல்ஜர் ஒருவன் கால் கட்டை விரலில் கடுமையான வலி இருப்பதாய் துடித்த போது இதை கவனித்தார்கள். நீ வீணை சப்தம் கேட்காமலே வீணை இசையை கேட்க வைக்க முடியும். நீ வீணை கேட்கும் போது மூளையில் எங்கே மின் துடிப்பு எவ்வளவு உண்டாகிறது என்று அறிந்து செயற்கையாக அதே மின் துடிப்பை கொடுத்தால் போதும்.. வீணை இசை கேட்கும்.. மனிதன் உணரும் எல்லாம் உணர்வுகளுமே மூளை எனும் அற்புதத்தில் நடக்கும் மேஜிக்.. "
இப்பொழுது அவன் முகம் ரத்தம் குடித்த ஓநாய் போல் மாறி இருந்தது.
முகில் மெல்ல மெல்ல இப்பொழுது அந்த விபரீதங்களை ஜீரணிக்க தொடங்கி நம்பத் தொடங்கி இருந்தான்.
இவன் விபரீதமானவன்...மிகமிக விபரீதமானவன். பிளாக் மாம்பா விட கொடிய நச்சு பாம்பு என்று நினைத்தான் முகில்.
"முகில் இதெல்லாம் எப்படி நான் பண்ண முடிந்தது என்று உனக்கு குழப்பம் இருக்கும்.. கொஞ்சம் விரிவா சொல்றேன்.. பொறுமையா கேளு..
நான் ஒரு game creator அது உனக்கே தெரியும். சில சைக்கோ தனமான மூளையை ஆக்கிரமிக்கும் அசாதாரண 3D game களை உண்டு பண்ணினேன். அதன் கொடூரத்தை பார்த்து யாரும் வாங்கவே பயந்தார்கள். அப்படி மீறி என்னை தேடி வந்த சில கஸ்டமர்களை தான்..நீ உன் இயற்கை வாழ்வு னு பாழாப்போன ஸ்பீச் கொடுத்து கெடுத்த நியாபகம் இருக்கா ? அன்னைக்கு மட்டும் எனக்கு எத்தனை டாலர் நஷ்டம் தெரியுமா ?
ஆனால் தளராமல் நான் அதை வெளிநாட்டு இணைய கள்ள சந்தையில் விற்றேன்.. டார்க் வெப் டீப் வெப் தான் எனது சந்தை களம் அங்கே தான் அறிமுகம் ஆனார் ...
' ஜான் வால்டர் டெய்லர் '
அவர் முன்பு ஒரு முறை நீ கமெண்ட் அடித்தது போல ஏதோ உன் பக்கத்து தெரு டெய்லர் இல்லை..பிரபல மூளை நிபுணர்.. deep web ரெகுலர் கஸ்டமர் அவர்.
'நாம் இருவரும் இணைந்தால் ஒரு புதிய அற்புதத்தை உண்டு பண்ணலாம் ' என்றார்.
இந்த பழைய மாடல் படி VR ஐ கண்ணில் மாட்டி கொள்வதை தூக்கி தூர போடு.. உனது கேமை என்னிடம் கொடு நான் அதை மனித மூளைக்குள் நேராக உள்ளே செலுத்த முடியும் என்றார். அப்படி உண்டானது தான் call con ப்ரோக்ராம்.
அவரது ஸ்பெஷல் ஹெல்மெட் பற்றி சொன்னார். எனது game ஐ சிப் இல் வைத்து அதை அவர் கண்டு பிடித்த ஹெல்மட்டில் சொருக வேண்டும் அவ்வளவு தான் . அதன் பின் நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமக்கு வேண்டிய ஆளை...சாரி.. ஆக்சுவலி.. வேண்டாத ஆளை பிடித்து வந்து அவனுக்கு மயக்க மருந்து கலந்து கொடுதோ இஞ்ஜக்சன் பண்ணியோ மயக்கம் ஆக்கி இந்த ஹெல்மட்டை அனிய வைக்க வேண்டும் இதில் உள்ள ஊசிகள் சரியாக சில நரம்பில் குத்தி கொள்ளும். தனக்குள் feed பண்ண பட்ட உலகத்தை சப்ஜெக்ட் க்கு மூளையில் மின் துடிப்பாக feed பண்ணும் .
சப்ஜெக்ட் அதை நிஜ உலகம் என்று நம்ப தொடங்குவான். அந்த சப்ஜெக்டின் எதிர் வினை பொறுத்து game இல் ப்ரோக்ராம் செய்யப்பட்ட கதாபாத்திரங்கள் எதிர்வினை ஆற்றும். அந்த உலகத்தில் எனது game கள் தனக்கே உரிய screen play கொண்டு இருக்கும். உனக்கு நான் கொடுத்த ரயில் பயண ஸ்க்ட்ரிப்ட் போல...
அதற்கு அவனது மூளை தொடர்ந்து எதிர்வினை ஆற்றி கொண்டு இருக்க அவைகளை வெளியே மானிட்டரில் நாங்கள் கண்டு களிப்போம்.. அதை பதிவு பண்ணுவோம் அதை டார்க் வெப் இல் நல்ல விலைக்கு விற்போம். Live போடுவோம்... இந்த game ஐ சப்ஜெக்ட் எங்களுக்காக மூளையில் வலியை உணர்ந்த படி விளையாடும். கேம் நல்லா இருந்தா அதை save பண்ணி வேற சப்ஜெக்ட் க்கு சூப்பர் இம்போஸ் பண்ணி இதே கேமை விளையாட வைக்கவும் முடியும்..சப்ஜேக்ட் நிஜத்தில் வலியை உணரும் நிஜத்தில் உடல் கூட துடிக்கும்..ஆனால் தனக்கே தெரியாமல் ...செம ஜாலி இல்ல.. "
அவன் பேச்சை கேட்க கேட்க இப்போது இந்த முகிலின் விர்சுவல் உடல் பயத்தில் மெதுவாக நடுங்கியது.. டேனியல் ஒரு கொடூர சைக்கோ என்கிற உண்மை முகிலுக்கு மெல்ல புரிய தொடங்கியது..
கடைசியாக முகில் அவன் வீட்டுக்கு அவனை பார்க்க சென்றது நினைவு வந்தது அதன் பின் தான் தன்னை ஏதோ பண்ணி இருக்கிறான். என்று முகில் புரிந்து கொண்டான்.
"ஒரு நாள் உன் பிஸ்னசை கெடுத்ததுக்காகவா.. என்னை...என்னை.. இப்...இப்படி கொடூரமா பழிவாங்கற... " என்றான் முகில் நடுக்கமாக...
"ஹா ஹா..என்ன ரொம்ப சீப்பா எடை போட்டு இருக்க மைடியர் முகில்.. பழி வாங்கறது னு ஏதோ 80 காலத்து தமிழ் சினிமா வில்லன் மாதிரி என்னை கற்பனை பண்ணாத..
இது பழி வாங்கறது இல்ல .. டியர்..
This is science experiment... And you are my first subject. பெருமை படு பின்னால் ஆயிரகணகாண சப்ஜெக்ட் வந்தாலும் நீ தான் முதல். என் ப்ராஜெக்ட் ஹிஸ்டரியில் உனக்கு என்றைக்கும் ஒரு தனி இடம் உண்டு.
எங்களது கண்டு பிடிப்பை மனிதனுக்கு சோதனை பண்ணலாம் னு சோதனை எலியை தேடி கொண்டு இருந்த போது தான்.. என் பிஸ்னசை கெடுத்து என்னுடைய வெறுப்பை சம்பாதித்து இருந்த ..அப்பவே முடிவு பண்ணேன் நீ தான் என் முதல் சோதனை எலி.. my dear rat "
இந்த ஹாலில் நுழைந்ததும் அவன் தன்னை rat என்று அழைத்து ஏன் என்று இப்போது தான் முகிலுக்கு புரிந்தது..
"உனக்காக தான் காட்டில் கைவிட பட்ட ஒரு கட்டிடத்தை வாங்கினேன் மராமத்து செய்து மின்சார வசதி..செய்து ஒரு டெம்பர்வரி லேப் உண்டு பண்ணினேன்.
என்னை காண வீட்டுக்கு வந்த உன்னை காபியில் மயக்க மருந்து கொடுத்து.... என்ன செய்ய இது 80 காலத்து டெக்னீக்தானாலும் பலன் அளித்ததே.
உன்னை லேபில் கொண்டு வந்து வைத்து முதல் சோதனை தொடங்கினேன். உனக்காக பிரத்தியேக game ஐ உண்டு செய்தேன். Game கதாபாத்திர வடிவமைப்புக்கு reference உனது நிஜ உலகில் இருந்தே எடுத்தேன். நீ தினம் பார்க்கும் பார்பர்.. பூக்காரி அப்புறம் உன் தங்கை நீலா.. நீ படிக்கும் நியூஸ் பேப்பர்..இப்படி. இடையே கொஞ்சம் நான் பயன் படுத்தும் பொருட்களும் reference எடுத்து இருக்கிறேன்..உதாரணம் இந்த டிராகன் படம் போட்ட காகித காபி கப்.
நீ தினம் பார்க்கும் ஆட்களை கொஞ்சமே கொஞ்சம் உருவம் மாற்றி உலவ விட்டேன். உன் மூளைக்கு நான் கொடுத்த சவால்.
மேலும் நிஜ உலகில் இருந்து reference எடுத்தால் தான் நீ நிஜம் எது நிழல் எது என்று புரியாமல் தொடர்ந்து குழம்பி கொண்டே இருப்பாய்.
உனக்காக நான்கு லெவலில் ஒரு விளையாட்டை உண்டு பண்ணினேன். அதில் துரத்தல் உண்டு.. காதல் உண்டு..குழப்பம் உண்டு.. சஸ்பென்ஸ் உண்டு. உன்னை தொடர்ந்து குழப்பத்தில் வைத்து இருக்கும் படி அதில் திரை கதை இருக்கும்.
லெவல் 1 ஐ நீ முடித்தால் லெவல் 2 விலிருந்து வெறும் சேஸிங் மட்டும் தான்.. வரும் வழியில் பார்த்து இருப்பியே வெறி நாய்கள்.. அது உனக்காக தான். அதிலிருந்து நீ தப்பினால் லெவல் 3 ஆயுதம் ஏந்திய கொலைக்காரர்கள். அவர்களை நீ கடந்தால் லெவல் 4 அது தான் காடும் காட்டுவாசிகளும். இதில் யாராவது ஒரு enemy உன்னை இங்கே கொலை செய்து விட்டால்.. அங்கே நிஜத்தில் உனது மூளையின் முக்கிய பாகதில் சின்ன பட்டாசு வெடிக்கும் அந்த முக்கிய பாகம் சிதைந்து செயலிழந்து போகும். Like a brain death .and you will be like a vegetable. எனவே உன் உயிரை நீ இங்கே காபாற்றி வைத்து இருப்பது ரொம்ப முக்கியம்.
இதை வைத்து உலக அளவில் டார்க் வெப்பில் பந்தயம் கட்டினால் பயங்கரமாய் சம்பாதிக்கலாம்.. உலக பணக்காரர்கள் சைக்கோகள்.. தங்களுக்கு விருப்பமான பிளேயர் மீது லட்ச கணக்கில் கட்டுவார்கள். கிரிக்கெட் மேட்சை எல்லாம் தூக்கி சாப்பிட போகுது இந்த game..
நீ இப்ப டெஸ்டிங் mode ல இருக்க டியர்.. அதாவது என்னை மாதிரி வெளி ஆட்கள் game இல் உள்ளே interact ஆக முடியுமா என்ற சோதனை.. and than almost we have succeeded ."
"ஒரு வேளை நீ தப்பித்து லெவல் 4 தாண்டி விட்டால் மீண்டும் உன்னை ரயிலில் தூக்கி போட்டு விடுவார்கள். மீண்டும் லெவல் 1 இல் இருந்து விளையாட்டு தொடங்கும் . A never ending game..like never before.
ஆனால் ...
இங்கு தான்.. நீ நாங்கள் எதிர்பாராத வகையில் லெவல் 1 யிலிருந்து தாவி லெவல் 4 க்கு போய் எங்களுக்கு ஆச்சர்யம் கொடுத்தாய். உன் விளையாட்டை ரசித்தேன்... உன் துணிச்சலுக்கு பாராட்டுகளுடன் பரிசு கொடுக்க நினைத்தேன். அதான் இந்த உண்மைகளை எல்லாம் உனக்கு சொல்லி விட்டேன்.. இதான் நான் கொடுக்கும் பரிசு.. உண்மையில் இதுவும் ஒரு எக்ஸ்பிரிமெண்ட் தான்..ஒருவன் கால்கன் பற்றி தெரிந்து கொண்டே விளையாடினால் எப்படி இருக்கும் என்ற சோதனை... எனவே தயாராய் இரு..பாக்கலாம் எவ்ளோ நேரம் தாக்கு பிடிக்கிறாய் என்று.. And than i hope u will not disappoint me.
அப்புறம்.. ரொம்ப போர் அடிச்சா சொல்லு இவளை அனுப்பி வைக்கிறேன் " என்றான்
கைகளை சொடுக்கினான். பின்னால் இருட்டில் இருந்து அவள் வெளிப்பட்டு அவன் அருகில் வந்து நின்றாள்.
'மானஸா '.....
வெள்ளை சுடியில் இருந்தாள் என்னை பார்த்து கை அசைத்து புன்னகைத்தாள் . காதல் ஒரு மாயை என்று கூட கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் இங்கே காதலியே மாயை. என்று நினைத்தேன். சாரி சாரி..நினைத்தான். என்னை பார்த்து இல்லை அவனை பார்த்து கை அசைத்தாள்..
நான் இப்போது இறந்து போன சவம் போல் ஆனேன்..தப்பிக்கவே முடியாத ஒரு சைக்கோபாதிக் மரண விளையாட்டு இது என்று புரிந்து கொண்டேன்..சாரி புரிந்து கொண்டான். உடல் உதறல் எடுத்தது.
டேனியல் கைகளை தட்டினான்..
அறையின் காட்சி மாறியது.. உடனே முகில் மேல் வானத்தில் இருந்து பூ மழை பெய்தது..
"Congratulation you finished level 1 " என்றது ஒரு ஆசிரிரி..
அதை தொடர்ந்து.." level 2 starts now " என்றது..
ஹால் முழுக்க சைரன் ஒளி கேட்டது.. அங்கே ஒரு கதவு திறக்க வெறி நாய்கள் அங்கே இருந்து பாய்ந்து வர........
"நீ விளையாடிட்டு இரு எனக்கு ஜான் வால்டர் டெய்லர் கூட மீட்டிங் இருக்கு உண்ண அப்புறம் சந்திக்கிறேன் டியர் "என்று சொல்லி விட்டு டேனியல் கிளம்பினான்.
🕸 எப்போது வெளியேற்றினார்கள் என்று தெரிய வில்லை திடீரென முகில் ஸ்டேஷனுக்கு எதிரே தன்டவாளத்தில் ஓடி கொண்டு இருந்தான். அது காட்டை நோக்கி செல்லும் தன்டவாளம்.
முகிலுக்கு பின்னால் பிசாசுகள் போல அந்த வெறிநாய்கள் துரத்தி வர... welcome to level 2 என்ற எழுத்துகள் வானத்தில் ஒளிர்ந்தது.
முகில் முடிவில்லா பாதையில் முடிவில்லா பயணம் நோக்கி பீதியுடன் முடிந்தளவு வேகமாக ஓட தொடங்கினான்.
சரியாக 20 நிமிடம் கழித்து அந்த வெறி நாய்கள் முகிலின் கழுத்தை கடித்தன.
✴ ✴ ✴ ✴
சூறாவளியாய் சுற்றும் அறை கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து நின்றது .
முகில் என்னை பார்த்து புன்னகை செய்தான். எனக்கு மூளை சுத்தமாக வேலை செய்வதை நிறுத்தி இருந்தது.
"ரொம்ப குழப்பமா இருக்கு இல்ல இன்னும் கொஞ்சம் காட்சி பாக்கி இருக்கு முகில்.. அதையும் பார்த்து விட்டால் உனக்கு எல்லாமே கிரிஸ்டல் க்ளியரா புரிந்து விடும் அது வரை குழப்பமாக தான் இருக்கும் கொஞ்சம் பொறுத்து கொள் "என்றான் முகில்.
(தடக் தடக்.. அடுத்த அத்தியாயத்தில் முற்றும் .)